கேரளத்தில் வெந்நீர் ஊற்றிக் கொல்லப்பட்ட தமிழன் – பெ.மணியரசன் கடும் கண்டனம்

சபரிமலை சென்ற சென்னையைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் மீது வென்னீரை ஊற்றி படுகாயப்படுத்தி அவரது உயிரைப் பறித்த மலையாளிகளின் கொடுஞ்செயலையும்,அச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யாத கேரள காவல் துறையின் உதாசீனப் போக்கையும் கண்டித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை விட்டுள்ளார்.

அவரது அறிக்கையில், சென்னையை அடுத்த திருவேற்காடு திருவேங்கட நகரைச் சேர்ந்த சாந்தவேல் என்ற ஐயப்ப பக்தர் சபரி மலைக்குச் சென்றபோது, பம்பையில் கேரளக்காரரின் தேநீர்க் கடையில் இவருக்கும் கடைக்காரருக்கும் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதில் ஆத்திரமடைந்த மலையாளியான கடைக்காரர் தேநீர் போடுவதற்காகக் கொதிநிலையில் வைத்திருந்த தண்ணீரை சாந்தவேல் மீது ஊற்றியுள்ளார். இதனால் கடுமையாக அவரின் முதுகுப் பக்கம் வெந்துள்ளது. கோட்டையம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை அவருடைய மனைவியும் உறவினர்களும் உயிர்காப்பு வண்டியில் கொண்டுவந்து சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 11.1.2012 அன்று சேர்த்துள்ளனர்.

அவர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 15.1.2012 விடியற்காலை இறந்துவிட்டார். விபத்து என்ற அடிப்படையில் இவருக்குக் கோட்டையத்திலும் சென்னையிலும் சிகிச்சை அளித்துள்ளனர். இனி இதைக் கொலை வழக்காக (302) மாற்றி, வெந்நீர் ஊற்றிய மலையாள நபரையும், அதில் இன்னும் தொடர்புள்ள மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும்.

சென்னை முகப்பேரைச் சேர்ந்த சந்திரன் என்ற மலையாளி குருசாமியாக இருந்து மேற்படி சாந்தவேல் உள்ளிட்ட 80 பேரை சபரி மலைக்கு அழைத்துப் போயுள்ளார். மேற்படி சந்திரன் உண்மை விவரங்களை முழுமையாகச் சொல்ல மறுத்து வருகிறார்.

சந்திரனை காவல்துறை விசாரித்து நடந்த உண்மைகளைப் பெற வேண்டும். மேலும் சாந்தவேலுடன் தமிழகத்திலிருந்து சென்ற இதர ஐயப்ப பக்தர்களையும் விசாரிக்க வேண்டும்.

இரு மாநிலங்களைச் சேர்ந்ததாக இவ்வழக்கு இருப்பதால் தமிழக முதல்வர் செயலலிதா அவர்கள் இதில் தலையிட்டு, தீவிர நடவடிக்கை எடுத்து, சாந்தவேல் மீது வெந்நீர் ஊற்றி சாவுக்குக் காரணமான காயங்களை உண்டாக்கிய மலையாளத் தேநீர்க் கடைக்காரர் உள்ளிட்ட நபர்களை இந்தியத் தண்டனைச் சட்டம் 302ன் கீழ் கைது செய்து வழக்கு நடத்த கேரள அரசை வலியுறுத்தி உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

கேரளாவில் அண்மைக் காலமாக ஐயப்ப பக்தர்கள் உள்பட அப்பாவித் தமிழர்கள் பலர் மலையாளிகளால் தாக்கப்பட்டு வருகிறார்கள். தமிழர்கள் மீது வன்முறைத் தாக்குதல் நடத்திய மலையாளிகள் மீது கேரள அரசு சட்டப்படி சரியான நடவடிக்கை எடுப்பதில்லை.

கேரள அரசின் இவ்வாறான மலையாள இனச் சார்பு நிலை, மலையாளிகள் மேலும் மேலும் தமிழர்களைத் தாக்கத் தூண்டுகோலாக அமைந்துள்ளது என்பதைத் தமிழக முதல்வர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, சாந்தவேல் கொலைக்குக் காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு தீவிரமான நடவடிக்கைகளைத் தமிழக முதல்வர் எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இது குறித்து தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published.