சென்னை : முல்லைப் பெரியாறு தொடர்பான இறுதி அறிக்கையை இந்த மாத இறுதியில் தாக்கல் செய்யமுடியாது; 2 மாதம் அவகாசம் வேண்டும் என்று ஐவர் குழு , உச்ச நீதி மன்றத்திடம் கேட்க உள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்வதற்காக உச்ச நீதிமன்றத்தினால் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் 5 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவின் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் தமிழக அரசு பிரதிநிதியும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான ஏ.ஆர்.லட்சும ணன், கேரள அரசு பிரதிநிதியும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான கே.டி. தாமஸ் மற்றும் மத்திய அரசு பிரதிநிதிகள் சி.கே.தட்டே, பி.கே.மேத்தா கலந்துகொண்டனர்.
இந்த கூட்டம் 3 மணி நேரம் நடந்தது. கூட்டம் முடிந்த பிறகு , தமிழக அரசு பிரதிநிதி ஏ.ஆர்.லட்சு மணன் நிருபர்களிடம் கூறியதாவது: முல்லைப் பெரியாறு அணை குறித்து பல்வேறு குழுக்கள் தாக்கல் செய்துள்ள அறிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதுவரை 11 அறிக்கைகள் கிடைத்துள்ளது. ஒரு குழுவின் அறிக்கை இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை.
அந்த குழு தற்போது முல்லைப் பெரியாறு அணையை துளையிட்டு அதில் இருந்து எடுக்கப்படும் மணல் மற்றும் கற்களை ஆய்வு பணிக்காக புனேவில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 2 துளைகள் மட்டுமே போடப்பட்டுள்ளது; மேலும் சில துளைகள் போடப்பட உள்ளது. அதில் இருந்து மாதிரி எடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட உள்ளது. இதற்கு மேலும் ஒன்றரை மாதம் அவகாசம் தேவைப்படுகிறது என்று அந்த குழு கூறியுள்ளது. இந்த குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டால் மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய முடியும்.
எனவே உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இம்மாதத்திற்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இறுதி அறிக்கை தாக்கல் செய்ய 2 மாதம் அவகாசம் வேண்டும். இது தொடர்பான மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.கே.ஜெயின் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் முன்பு விரைவில் விசாரணைக்கு வருகிறது. அதன்முடிவுக்கு காத்திருக்கிறோம். உயர்மட்ட குழுவின் கூட்டம் வரும் 26ம் தேதி டெல்லியில் நடக்கிறது. இவ்வாறு தமிழக அரசு பிரதிநிதி ஏ.ஆர்.லட்சுமணன் தெரிவித்தார்.