Search

இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை: மத்திய அரசு மெளனம் சாதிப்பது ஏன்? நாம் தமிழர் கட்சி வினா!

ஜெனிவாவில் தற்பொழுது நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமை மாமன்றத்தில் இன்னும் சில நாட்களில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த போரில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் மீது விசாரணைத் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ள நிலையில், இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து மத்திய அரசு வெளிப்படையாக ஏதும் கூறாமல் மெளனம் சாதிப்பது அதன் மீது ஐயத்தை ஏற்படுத்துகிறது.

சில நாட்களுக்கு முன்னர் ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள இலங்கையின் மனித உரிமைகளுக்கான சிறப்புத் தூதர் மகிந்த சமரசிங்கே, ஐ.நா. மனித உரிமை மாமன்றத்தில் இலங்கை மீது போர்க்குற்ற விசாரணைத் தீர்மானம் கொண்டு வரப்படும்போது அதனை எதிர்த்தும், இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் இந்தியா வாக்களிக்கும் என்று கூறியுள்ளார். அது மட்டுமின்றி, இலங்கைக்கு ஆதரவாகவே வாக்களிக்க போவதாக தங்களிடம் இந்திய அரசு உறுதி அளித்துள்ளதாகவும், எனவே இந்தியாவின் ஆதரவு 100 விழுக்காடு தங்களுக்கே என்றும் கூறியுள்ளார்.

மகிந்த சமரசிங்கே இவ்வாறு கூறியதற்கு இந்திய மத்திய அரசோ அல்லது ஐ.நா. மனித உரிமை மாமன்றத்திற்கான இந்தியப் பிரதிநிதியோ எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்காதது ஐயத்தை ஏற்படுத்துகிறது. 2009ஆம் ஆண்டு இலங்கையில் தமிழருக்கு எதிரான போர் முடிந்த கையோடு கூடிய ஐ.நா. மனித உரிமை மாமன்றத்தில், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகள் இலங்கைப் போரில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து இலங்கையே விசாரிக்க வேண்டும் என்று கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து இந்தியப் பிரதிநிதி கோபிநாத் அச்சங்குளங்கரே வாக்களித்தார். இதனால் தீர்மானம் தோற்றது. அதுபோல் இப்போதும் இலங்கை அரசைக் காப்பாற்ற இந்திய அரசு திட்டமிட்டுள்ளதா என்பதை அது நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.

இந்திய நாட்டின் அங்கமாகவுள்ள தமிழ்நாட்டு மக்களின் தொப்புள் கொடி உறவுகள் ஒன்றே முக்கால் இலட்சம் பேர் இலங்கையில் நடந்த போரில் கொல்லப்பட்டுள்ளனர். திட்டமிட்டு நடத்தப்பட்ட அந்த இனப் படுகொலைக்கு ஆளாக தமிழின மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் வற்புறுத்தி வருகின்றன. இந்த நிலையில், தமிழினப் படுகொலை செய்த இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்குமென்றால், அது இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலைக்குத் துணை போயுள்ளது என்பது உறுதியாகும்.

ஐ.நா. மனித உரிமை மாமன்றத்தின் தலைவர் நவநீதம் பிள்ளை அவர்கள் கூறியதுபோல், இலங்கை அரசுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை பற்றி விவாதம் வரும்போதெல்லாம், அந்நாட்டைக் காப்பாற்ற இந்தியா முன்னால் வந்த நிற்பது ஏன்? அந்தப் போர் தொடர்பான உண்மையில் இந்தியா மறைக்க வேண்டிய உண்மை ஏதும் உள்ளதா? என்று வினவினார். இந்திய அரசின் போக்கு அப்படித்தான் உள்ளது.

எனவே, ஐ.நா. மனித உரிமை மாமன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டுவரப்படும் போர்க்குற்ற விசாரணைத் தீர்மானத்தை இந்தியா எதிர்த்தாலோ அல்லது இலங்கை அரசுக்கு சாதமாக எதிர்த்து வாக்களிக்காமல் நின்றாலோ, அந்தப் போரில் இந்திய அரசு சம்பந்தப்பட்டுள்ளது ஐயத்திற்கிடமின்றி அம்பலமாகும். நாங்கள் இந்தியாவின் போரைத்தான் நடத்தினோம் என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியது உண்மைதான் என்பது தமிழினத்திற்கு மட்டுமல்ல, உலகத்தின் பார்வைக்கும் உறுதியாகும். அது இந்திய அரசுக்கு மிகப் பெரிய தலைக்குனிவை ஏற்படுத்தும்.

எனவே, தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்ட்ட தீர்மானத்திற்கு இணங்க, இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணைத் தீர்மானத்தை இந்தியா ஆதரித்திட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

இந்திய அரசுக்கு இதையே கோரிக்கையாக வைத்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் நாளை (சனிக்கிழமை) மாலை 3 மணிக்கு சென்னையில் மாபெரும் பேரணி நடத்தப்படவுள்ளது. எழும்பூர் இராஜரத்தினம் மைதானத்தில் இருந்து புறப்பட்டு காந்தி இர்வின் பாலத்தில் முடிவடையும் இந்தப் பேரணியை இயக்குனர் மணிவண்ணன் தொடங்கி வைக்கிறார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *