Search

கூடங்குளம் பிரச்னையில் இறுதி நடவடிக்கை ஜெயலலிதா இன்று முக்கிய முடிவு!

சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னையில் முக்கிய முடிவு எடுப்பதற்காக தமிழக அமைச்சரவை கூட்டம், முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று நடக்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி கூடங்குளம் பகுதியில் கடந்த 7 மாதங்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில், அணுமின் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளவும், பொதுமக்களின் அச்ச உணர்வை போக்கவும் அவர்களின் கருத்துகளை அறிந்து அரசுக்கு தெரிவிக்கவும் தமிழக அரசு அண்மையில் நிபுணர் குழுவை அமைத்தது. இந்த குழுவில் அணு மின்சக்தி கழகத்தின் முன்னாள் தலைவர் எம்.ஆர். சீனிவாசன், அண்ணா பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியர் டி. அறிவுஒளி, அண்ணா பல்கலைக்கழக எரிசக்தி ஆய்வு மையத்தின் இயக்குநர் எஸ். இனியன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எல்.என். விஜயராகவன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்த குழுவினர் கூடங்குளம் பகுதிக்கு கடந்த மாதம் 18ம் தேதி நேரில் சென்று அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்தும் அப்பகுதி மக்களிடையே நிலவும் அச்ச உணர்வு குறித்தும் அறிந்து கொண்டு சென்னை திரும்பினர். சென்னையில் இந்த குழு ஒரு வாரம் விரிவாக ஆலோசனை நடத்தி ஆய்வு அறிக்கையை தயார் செய்தது. பிப்ரவரி 28ம் தேதி ஆய்வு அறிக்கையை நிபுணர் குழுவினர் முதல்வர் ஜெயலலிதாவை தலைமை செயலகத்தில் சந்தித்து சமர்ப்பித்தனர். இந்த ஆய்வு அறிக்கை தொடர்பாக அரசு உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளார். இதற்கிடையில், அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்தால் கூடங்குளம் பகுதியில் நிலவும் சட்டம்,ஒழுங்கு நிலைமை குறித்து நேரில் ஆய்வு செய்ய தமிழக கூடுதல் டிஜிபி ஜார்ஜ் சில தினங்களுக்கு முன்பு கூடங்குளம் சென்றார். கூடங்குளத்தில் தற்போது 3 கம்பெனி போலீசார் (250 பேர்) பாதுகாப்பு பணியில் உள்ளனர். 24 மணி நேரமும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூடங்குளத்தில் தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்ட உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஜார்ஜ் ஆலோசனை நடத்தினார்.

நாகர்கோவிலிலும் ஆலோசனை நடத்தினார். பின்னர் சென்னை திரும்பியதும் சட்டம்,ஒழுங்கு நிலவரம் குறித்து போலீஸ் டிஜிபி மூலம் அறிக்கை சமர்ப்பித்தார். இதற்கிடையே, கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கும் விவகாரத்தில் பல்வேறு கட்சிகளும் ஆதரவான நிலையை எடுத்துள்ளன. இந்நிலையில், மத்திய அரசின் நடவடிக்கை, தமிழக அரசு அமைத்த நிபுணர் குழுவின் அறிக்கை மற்றும் சட்டம்,ஒழுங்கு நிலவரம் குறித்த அறிக்கை மற்றும் கூடங்குளம் எதிர்ப்பாளர்களின் கோரிக்கை மனு ஆகியவை குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா விரிவான ஆலோசனை நடத்தினார். நிபுணர் குழு அறிக்கை குறித்து விவாதிக்கவும் முக்கிய முடிவு எடுக்கவும் முதல்வர் ஜெயலலிதா இன்று தமிழக அமைச்சரவையை கூட்டி இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.  சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் கடைசி வாரம் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் நடக்கும் என்று தெரிகிறது.

இதையொட்டி, பட்ஜெட் தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. பட்ஜெட்டில் பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் அறிவிப்பார். அது பற்றியும் அமைச்சர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை நடத்துகிறார். பட்ஜெட்டில் சேர்க்க வேண்டிய திட்டங்கள், துறை வாரியாக சலுகைகள், இதர சிறப்பு திட்டங்கள் தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது. மாநிலத்தில் நிலவும் கடுமையான மின்வெட்டு பிரச்னையால் தவித்துவரும் தமிழக மக்கள், கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரம் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது. அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் முதல்வர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் நிலவுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *