பன்னாட்டு விசாரணையை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பதேன்? நாம் தமிழர் கட்சி வினா
தமிழினப் படுகொலை செய்த இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்றங்களை சுதந்திரமான பன்னாட்டுக் குழுவை அமைத்து விசாரணை நடத்துவதை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்க்கும் என்று அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கூறியுள்ளது கண்டனத்திற்குரியதாகும்.
இரண்டரை ஆண்டுக்காலப் போரில் ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை இனவெறி அரசு மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ள நிலையில், அப்படிபட்ட தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்கும்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதற்கு எதிர்ப்புக் காட்டுவது வினோதமாகவுள்ளது.
மார்க்ஸ் – லெனின் கொள்கை வழி நின்றபதாக கூறும் மார்க்சிஸ்ட் கட்சி, தேசிய இனங்களின் சுய நிர்ணய போராட்டத்தை ஆதரிக்க வேண்டும் என்று கொள்கையை கைவிட்டுவிட்டதா என்று கேட்டதற்கு, அதை வெளியில் இருந்து திணிக்கக் கூடாது என்று கூறியுள்ளார். இது தமிழீழ விடுதலைப் போராட்டத்தை புரிந்தும் புரியாததுபோல் பேசும் ஏமாற்றுச் சொற்களாகும். இலங்கையில் தமிழர்கள் நடத்திவருவது சுய நிர்ணய போராட்டம் அல்ல என்று கூறும் ஒரே மார்க்சியர் இவராகத்தான் இருக்க முடியும். அதுமட்டுமல்ல, ஈழத் தமிழர்களின் விருப்பத்தையறிய இலங்கையில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிக்கிறீகளா என்று கேட்டதற்கு, அதனை எதிர்ப்பதாகவும் ரங்கராஜன் பதில் கூறியுள்ளார்.
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்