கால்களை உறுதியாக வைத்திருந்தால் கைகள் எங்கும் பற்றலாம் – ச.ச.முத்து

ஒரு தோல்விக்கு, ஒரு பின்னடைவுக்கு என்ன என்ன காரணங்கள் எல்லாம் அடுக்க முடியுமோ அத்தனை காரணங்களும் சொல்லப்பட்டு முடிந்துவிட்டது. இதற்கு முன்னர் ஆயிரம் ஆண்டுகால உலக வரலாற்றில் சாம்ராஜ்ஜியங்களும், உரிமைப் போராட்டங்களும் தோற்றதற்கான அனைத்து காரணங்களையும் எமது தோல்விக்கும் கொண்டுவந்து காரணங்களாக காட்டியாயிற்று.

தோற்றுவிட்டோமே என்ற ஆதங்கங்கத்துடன் கதைக்கும் காரணங்கள் என்ற நிலைமாறி இப்போதெல்லாம் இந்த தோல்விக்கு வித்தியாசமாக மற்றவர்கள் இதுவரை சொல்லாத ஏதும் காரணத்தை சொல்வதன் மூலம் தமது புத்திசீவித்தனத்தை முகவரிப்படுத்தும் தன்மையாகவே மாறிக்கொண்டிருக்கிறது. இப்படியும் சிந்திப்பார்களா என்று மலைக்கும் அளவுக்கு சிலரது காரணங்கள் அமைந்திருக்கும்.

இதற்கென்றே பிரத்தியேகமாக ‘ரூம்’ போட்டு சிந்தித்திருப்பார்களோ என்னவோ…! அரசியலை(?) வடிவாக செய்திருக்கவில்லை என்றும், ‘மாஸ் வேர்க்’ ஆழமாகச் செய்யவில்லை என்றும், ‘சர்வதேச நகர்வு (சர்வதேசம் என்ன தனியாக ஒரு வரையறையான பாதையிலா நகர்கிறது) பற்றி சரியாக புரிந்துகொள்ளவில்லை என்றும், மணலாற்றுக்குள்ளே வைத்து வெளுத்திருந்தால் முல்லைத்தீவுக்கு வந்திருக்கமாட்டாங்கள் என்றும் இப்படி இப்படி ஆயிரம் காரணங்களுடனும், 2003ல் தலைவர் அழைத்திருந்தபோது போயிருந்தால் நான் காப்பாத்தி இருப்பேன்’ போன்ற ‘One man army ரம்போ’ தனமான காரணங்களும் அவிழ்ந்து பரவிக்கொண்டிருக்கின்றன.

கூந்தலுக்கு நறுமணம் இயற்கையானதா? என்ற செண்பகபாண்டியனின் வினாவுக்கு விடையுடன் வந்திருந்த தருமி போல இப்போது தோல்விக்கு சரியான காரணம் எதுவென்ற இரவல் விடைகளுடன் ஆயிரமாயிரம் தருமிகள். தோல்விக்கான காரணத்தை தேடுவதோ அதற்கான ஆய்வுகளைச் செய்வதோ கூடாது என்பதல்ல.

தோல்விக்கான காரணம் என்ற போர்வையில் முப்பதாண்டு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த அமைப்பின் மீதும் அதன் தலைமை மீதும் விசமங்களை தொடுப்பதுதான் தவறு. அப்படியான ஒருவரை போனவாரம் எதேச்சையாக சந்திக்க நேர்ந்தது. அவரும் அடிக்கடி அல்லது  இடைக்கிடை தொலைக்காட்சி, வானொலி என்று குரலும் முகமும் காட்டுபவர்தான். மிகவும் ‘உச்‘சுக்கொட்டியபடியே இருந்தார், நடைபெற்ற அழிவுகளுக்கும் பின்னடைவுக்கும். கடந்த மூன்று வருடமாக இத்தகைய கதைகள் கேட்டுகேட்டு இவர் எங்கு வரப்போகிறார் என்பது தெரிந்தாலும் காட்டிக்கொள்ளவில்லை. ஒரே ரகமான இப்படியான கதைகள்தான் வித்தியாசம் வித்தியாசமான வாய்களில் இருந்து வித்தியாசமான குரல்களில் கேட்டுக்கொண்டு இருக்கின்றோமே.

முதலில் முள்ளிவாய்க்கால் தோல்வியை கவலைதரும் முகத்துடன் வர்ணித்து ஆரம்பிப்பார்கள். எப்பிடி இருந்த இயக்கம் இப்பிடி ஒண்டுமில்லாமல் போயிட்டுது என்று சோகப்படுவார்கள். இனி ஒண்டும் எழும்ப ஏலாது என்று குடுகுடுப்பைக்காரனின் எதிர்வுகூறல்

போலச் சொல்லுவார்கள். இதெல்லாம் சொல்லும்போது அவர்களின் உடல்மொழி ஒரு இராசதந்திரியின் சாயல் போலவே குறுகி, நீண்டு, தோள்குலுக்கி, புருவம் நெளித்துத் தொடரும்.

பிறகுதான் விசயத்துக்கு வருவார்கள். ‘இவர்கள் இதைச் செய்திருந்தால் பிரச்சினை வந்திருக்காது’ என்று ஏதோ ஒரு காரணத்தை சொல்லுவார்கள். நான் சந்தித்து வரும் ஒரு காரணத்தை சொன்னார். ஆறு வித்தியாசம் காட்டுங்கள் போல அவரும் பீடிகையுடன்தான் சொன்னார். இதுக்கு முன்னர் யாருமே இப்படி ஒரு காரணம் தேடி இருக்கமுடியாது என்ற நம்பிக்கையுடன் அவர் சொன்ன காரணம். ‘விடுதலைப் புலிகள் மற்ற உலக விடுதலை இயக்கங்களுடன் தொடர்புகளைப் பேணி இருந்தால் இந்த நிலை வந்திருக்காது’ என்பதுதான்.

அவர் சொல்லிவிட்டுப் போய்விட்டார். ஆனால் இதனைப் போன்றவர்களுக்கு ஒன்று மட்டும் ஏன் புரிவதில்லை என்ற சிறு ஏக்கம் எனக்குள் ஏற்பட்டது. ஒரு விடுதலை இயக்கத்தை முப்பது ஆண்டுகளுக்கு மேலாக கட்டியமைத்து போராடிக்கொண்டிருந்தவர்கள். இத்தகைய தொடர்புகளை தவறவிட்டிருப்பார்களா என்று ஏன் யோசித்துப் பார்க்கவில்லை.

உண்மையில் ஒரு விடுதலை இயக்கம் தோன்றுவதற்கு பலபல அகபுற காரணங்கள் இருந்தாலும் அவற்றில் மிக முக்கியமானது இன்னொரு விடுதலை இயக்கத்தின் வரலாறு தந்த உணர்வுதான். ஒரு விடுதலை இயக்கத்துக்கு எப்போதுமே மனதளவில் மிகமிக அண்மையானவர்கள் மிக நெருக்கமானவர்கள் அவர்களை போன்றே விடுதலைக்காக உண்மையாக போராடும் உலக அமைப்புகள்தான்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் இதனை நன்கே பார்க்கமுடியும். அயலில் தமிழ்நாட்டில் பெரியார் தலைமையில் நடைபெற்ற சமூக மாற்றத்துக்கான போராட்டங்கள், சமூக சீர்திருத்தங்களுக்கான எழுச்சிகள், அதனைப் போலவே சிங்களத் தேசத்தில் 71ல் நடைபெற்ற சிங்கள இளைஞர்களின் அரசு எதிர்ப்பு ஆயுதக்கிளர்ச்சி, வியட்நாமில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக நடாத்தப்பட்டபோர், பாலஸ்தீனத்தில் கொழுந்துவிட ஆரம்பித்திருந்த பாலஸ்தீன விடுதலைப் போராட்டம் என்று பல காரணங்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆரம்பப் புள்ளிகளாக வரலாற்றை அசைய வைத்தன. இது இயல்பானதே. இயற்கையானதுதான்.

தேசியத் தலைவரை விடுதலைப் போராட்டத்துக்கு உந்தி தள்ளிய பாடமாக அவர் தனது பேட்டிகளிலும் ஒளிக்காட்சிகளிலும் கூறும்விடயம் கவனிக்கதக்கது. இந்திய தேசிய இராணுவத்தை ஆரம்பித்து இந்திய சுதந்திரத்துக்காக வேறு நாட்டில் இருந்து இந்தியாவை நோக்கி படை நடாத்திய சுபாஸ் சந்திரபோஸின் வரலாறும், உரைகளும், இந்தியாவை ஆண்டுகொண்டிருந்த பிரித்தானிய ஆட்சியாளர்கள் மீது இந்தியாவுக்குள் தாக்குதலை நடாத்தி அவர்களை விரட்டலாம் என்றும் இந்தியாவை ஒரு சோசலிச தேசமாக மாற்றலாம் என்றும் ஆயுதம் தரித்துப் போராடிய பகத்சிங்கின் வரலாறும் அவரின் உரைகளும் தன்னை மிகவும் பாதித்தாக தேசிய தலைவர் சொல்லி இருக்கிறார்.

இப்படி உலக விடுதலை இயக்கங்களின் வரலாறுகளில் இருந்து முகிழ்ந்தெழுந்து வந்த ஒரு அமைப்பு, எப்படி அத்தகைய விடுதலை இயக்கங்களுடன் தொடர்புகளைப் பேணாமல் விட்டிருக்க முடியும். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைப் பொறுத்தவரையில் அது தனது ஆரம்ப நாட்களில் இருந்தே இத்தகைய தொடர்புகளை தேடுவதிலும், கிடைத்த தொடர்

புகளை இறுக்கமாக்குவதிலும் மிக நேர்த்தியாக செயற்பட்டுவந்துள்ளது.

தேசியத் தலைவர் பற்றி அறிந்தவர்களுக்கு தெரிந்திருக்கும் அவர் இத்தகைய விடுதலை அமைப்புகளுடன் தொடர்புகளைப் பேணுவதில் காட்டும் ஆர்வமும் அதற்கான தேடலும். விடுதலை அமைப்புகள் எமது விடுதலை இயக்கத்தை நெருங்கி வரவேண்டும் என்பதற்காகவே அவர்கள் எந்தவொரு சந்தேகமும் இன்றி விடுதலைப் புலிகள் அமைப்பை நட்புடன் நோக்க வேண்டும் என்பதற்காகவே ஆரம்பத்திலிருந்து அவர் செயற்பட்டவர். அது பற்றி அடுத்த வாரம் பார்ப்போம். அதற்கிடையில் இதனை வலியுறுத்தும் ஒரு சம்பவத்தை பார்க்கலாம்.

கிட்டு பிரித்தானியாவில் வந்திருந்து சிறிது காலத்திலேயே அவருக்கு எதிரான தகவல்களை இந்தியப் புலனாய்வு அமைப்பும் அதன் தொடர்பாளர்களும் பரப்ப ஆரம்பித்திருந்தனர். இதனால் கிட்டு பிரித்தானியாவைவிட்டு வெளியேறவேண்டிய சூழ்நிலை, வலிந்து அரசு மட்டத்திலும் பலவேறு மட்டங்களிலும் ஏற்படுத்தப்பட்டது. அங்கிருந்து சென்று வேறு நாடுகளில் தங்குவதற்கான விண்ணப்பங்கள் பலவும் அந்த அந்த நாடுகளால் நிராகரிக்கப்பட்டு இருந்தன. அந்த நேரம் மிக கடுமையானது.

ஏற்கனவே கிட்டுவுக்குள் இருந்த தாயகத்துக்கு மீண்டும் போய் விடுதலைப் போராட்டத்தில் நேரடியாக ஈடுபடும் ஆர்வம் இதனால் இன்னும் வீச்சானது. இதனையும் தனது மன

குமுறல்களையும் தலைவருக்கு எழுதி அனுப்பி இருந்தார். எந்த நாட்டிலும் நிரந்தமாகத் தங்கி இயக்கவேலை செய்யமுடியவில்லை என்றும் எழுதி இருந்தார்.

அதற்கு சிறிது காலத்துக்கு பின்னர் பெரியமகேஸ் அண்ணா தலைவரை சந்திக்க போயிருந்தபோது தலைவர் ‘கிட்டு ஏன் நாடுகளுடனே மட்டும் இன்னும் கதைத்து கொண்டு திரிகிறான். அங்கேதான் லத்தீன் அமெரிக்காவிலும், ஆபிரிக்காவிலும் உலகம் முழுதும் ஏராளம் விடுதலை இயக்கங்கள் இயங்குகின்றனவே. அவர்களுக்கு எங்கள் வலி தெரியும்.

அவர்களுடன் கதைத்து அவர்களுடன் போய் இருந்து எமக்கான வேலைகளை செய்யலாம்தானே’ என்று சொல்லி இருக்கிறார். கிட்டு இதனை மிகவும் ஆச்சரியத்துடன் ஒருநாள் குறிப்பிட்டிருந்தார். ‘தலைவர் அங்கை ஆயிரம் வேலைகளுடன் களத்தில் நின்றாலும் அவர் இப்படி ஒரு பார்வையையும் எப்போதும் வைத்திருக்கிறார்’ என்று.

விடுதலைப் புலிகள் முன் காலங்களில் 79ல் வெளியிட்ட துண்டு பிரசுரத்தில் ‘சோசலிச தமிழீழம் நோக்கி’ என்று தலைப்பு அமைத்ததும், 78ல் விடுதலைப் புலிகள் இலட்சினையுடன் அதுவரை செய்யப்பட்ட தாக்குதல்கள் பத்துக்கு உரிமை கோரியதும், 85ல் அமெரிக்காவில் மருத்துவர் பஞ்சாட்சரம் கூட்டிய தமிழீழ மாநாட்டுக்கு வரமுடியாத காரணங்களை விளக்கி தலைவர் எழுதிய கடிதத்தை விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகையான விடுதலைப் புலிகளில் வெளியிட்டதும் உலக விடுதலை இயக்கங்களுடன் கரம்கோர்ப்பதற்கு விடுதலைப்புலிகள் விடுத்த சமிக்ஞைகளே. இதனை அடுத்த வாரம் விபரமாக..

(தொடரும்.. தொடர்புகள் பற்றி)

நன்றி : ஈழமுரசு

Leave a Reply

Your email address will not be published.