வட மாகாண சபை கட்டிடம் இன்று வெள்ளிக்கிழமை காலை எட்டு மணிக்கு திறந்துவைக்கப்பட்டுள்ளது.
யாழ். கைதடியில் 450 மில்லியன் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடத்தினை வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் இணைந்து திறந்துவைத்தனர்.
இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன், நாடாளுமன்ற உறுப்பினாகளான எம்.ஏ.சுமந்திரன், மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
வட மாகாண சபையின் தவிசாளராக சிவஞானம் தெரிவு
வட மாகாண சபையின் தவிசாளராக கந்தையா சிவஞானம் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மாகாண சபையின் முதல் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது.
இதன்போது, சபையின் தவிசாளர் தெரிவு இடம்பெற்றது. இதற்காக கந்தையா சிவஞானத்தின் பெயரினை மாகாண கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா முன்மொழிய மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் வழிமொழிந்தார். இதனையடுத்து கந்தையா சிவஞானம வட மாகாண சபையின் தவிசாளராக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.
இதேபோன்று சபையின் பிரதி தவிசாளர் தெரிவு இடம்பெற்றது. இதற்காக அன்ரனி ஜெகநாதனின் பெயரினை மாகாண சுகாதர அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் முன்மொழிய மாகாண கடற்தொழில் அமைச்சர் பாலசுப்பிரமணியம் டெனிஸ்வரன் வழிமொழிந்தார். இதனையடுத்து அவர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.