கங்குவேலிப் பகுதியில் வயலுக்குச் சென்ற விவசாயிகள், கும்பல் ஒன்றினால் கோடரியால் தாக்கப்பட்டு படுகாயமுற்ற நிலையில் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கங்குவேலி கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த நான்கு விவசாயிகளே இவ்வாறு தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது பற்றி தெரியவருவதாவது:-
கங்குவேலியைச் சேர்ந்த விவசாயிகள் தங்களுக்குச் சொந்தமான படுகாடு ஊற்று என்னும் பகுதியில் இருக்கும் வயல்களுக்கு கடந்த திங்கட்கிழமை மாலை சென்றபோது தெகிவத்தை என்ற கிராமத்தைச் சேர்ந்த ஆயுதம் தாங்கியோரும் மக்களும் கோடரி, கத்தி, பொல்லு போன்ற ஆயுதங்களைக் கொண்டுவந்து வயலில் வேலை செய்துகொண்டிருந்த விவசாயிகளை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதனால் வைரமுத்து கிருஷ்ணமூர்த்தி, சிதம்பரப்பிள்ளை துளசிநாதன், மாணிக்கம் கோணலிங்கம், ஆறுமுகம் தேவமனோகரன் ஆகிய நாலு பேரும் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
மூன்று விவசாயிகள் சிறு காயங்களுடன் தப்பி ஓடியுள்ளனர். இதுபற்றி கருத்துத் தெரிவித்த பட்டித்திடல் விவசாய சங்கத் தலைவர் கூறியதாவது:-
சுமார் 900 ஏக்கர் காணிகளை தெகிவத்தையைச் சேர்ந்த பெரும்பான்மை மக்கள் கையகப்படுத்தி விட்டார்கள். இதுபற்றி நாம் முறையிட்டுள்ளோம்.
1956ஆம் ஆண்டு தொடக்கம் இந்த வயற்காணிகளில் விவசாயம் செய்துவருபவர்கள் கங்குவேலி விவசாயிகள். 1985ஆம் ஆண்டுக்குப் பின்னர் வன்செயல் காரணமாக செல்லமுடியவில்லை. 2002ஆம் ஆண்டு மீண்டும் குறித்த வயல்களுக்குச் சென்று விவசாயம் செய்துவந்தோம். 2006ஆம் ஆண்டுக்குப் பின் செல்லமுடியவில்லை. 2009ஆம் ஆண்டு தெகிவத்தை மக்கள் பூர்வீகமாக எமக்குச் சொந்தமான காணிகளை கையகப்படுத்தி விட்டார்கள். நாங்கள் முறையிட்டதன் பேரில் மூதூர் பிரதேச செயலாளரும் பொலிஸாரும் வயல்களில் நெற்பயிர் செய்வதற்குரிய எழுத்துமூல அனுமதியைத் தந்ததன் பேரில் வயல்களுக்குச் சென்ற எமக்குத்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.