எங்கள் அப்பா – அறிவுமதி

அப்பா!
எல்லா அப்பாக்களையும்

போல்
நீயும்
இருந்திருந்தால்
என்
தாத்தாவும்
பாட்டியும்
இந்நேரம்
முசிறியில்
மூச்சோடு
இருந்திருப்பார்கள்!

அப்பா!
எல்லா
அப்பாக்களையும்
போல்
நீயும்
இருந்திருந்தால்
என்
அக்கா
அமெரிக்காவிலும்
என்
அண்ணன்
கனடாவிலும்
நான்
இலண்டனிலும்
சொகுசாகப்
படித்துக்
கொண்டிருப்போம்!

என்
அப்பாவா நீ
இல்லையப்பா
நீ
நீ
நீ
எங்கள்
அப்பா!

எங்கள் என்பது…
அக்கா
அண்ணன்
நான்
மட்டும்
இல்லை!

எங்கள் என்பது…
செஞ்சோலை
காந்தரூபன்
செல்லங்கள்
மட்டும்
இல்லை!

எங்கள் என்பது…
உலகெங்கிலும்
உள்ள
என்
வயது
நெருங்கிய
என்
அண்ணன்கள்
என்
அக்காள்கள்
என்
தங்கைகள்
என்
தம்பிகள்
அனைவருக்குமானது!

ஆம்…அப்பா!
நீ
எங்கள்
அனைவருக்குமான
‘ஆண் தாய்’
அப்பா!
அதனால்தான்
சொல்கிறேன்…

நான்
மாணவனாக
இருந்திருந்தால்
என்
மார்பில்
மதிப்பெண்களுக்கான
பதக்கங்கள்
பார்த்திருப்பாய்!

நான்
மானமுள்ள
மகனாய்
இருந்ததால்தானே அப்பா
என்
மார்பில்
இத்தனை
விழுப்புண்கள்
பார்க்கிறாய்!

சிங்கள வீரர் ஒருவரது
மனைவியின்
வயிற்றில்
வளர்ந்த
கருவுக்கும்
கூட
கருணை காட்டிய
அப்பா!

உன்
பிள்ளை
உலக
அறமன்றத்துக்கு
முன்
ஒரே
ஒரு
கேள்வி
கேட்கிறேன்!

பன்னிரெண்டு
வயது
பாலகன்
துப்பாக்கி
தூக்கினால்
அது
போர்க்
குற்றம்!

பன்னிரெண்டு
வயது
பாலகன்
மீது
துப்பாக்கியால்
சுட்டால்…
இது
யார்க்
குற்றம்!

என்னைச் சுட்ட
துப்பாக்கியில்
எவர்
எவர்
கைரேகைகள்!

உலக
அறமன்றமே!
உன்
மனசாட்சியின்
கதவுகளைத்
தட்டித்
திறக்க

உலகெங்கிலுமுள்ள
பாலச்
சந்திரர்கள்
அதோ
பதாகைகளோடு
வருகிறார்கள்!

பதில்
சொலுங்கள்!….

-அறிவுமதி-

நன்றி: பாவலர் அறிவுமதி

Leave a Reply

Your email address will not be published.