எரிந்த யாழ் நூலகம் – ஒரு கவிதை – எரிந்த தீக்குச்சி – ‘ரிதம்’

எரிந்த யாழ் நூலகம் – ஒரு கவிதை – எரிந்த தீக்குச்சி – ‘ரிதம்’

 

 

 

 

 

 

 

 

 

நூலகமே

நானும் நீயும் எஞ்சிய வகையில் சொந்தம்

 

அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது

எமது முன்னோரின் நூல்களின் வெம்மை

அறிவுச் சுடரேற்றிய நூல்கள்

அடுக்கிய தீக்குச்சிகளாய்

 

வெம்மை பரவாமல் நீரூற்றியிருக்கலாம்

நெருப்புத் தூவியதாய் நினைவுகள்

தழல் வீரம் செத்துப்போனது நூலெரிந்த சூட்டில்

 

நீயெரிக்க முன்னரே

நாமே பற்றி எரிந்தோம்

உயிர் கொடுத்துக் காத்த எம் மானத்தின் சின்னமாய்

எஞ்சிய நூலகக் கட்டிடம்

எரிந்த தீக்குச்சிகளுக்கிடையே

மருந்திற்காகவேனும்

எரியாத தீக்குச்சி தேடும் நூலகத் தீப்பொறி

 

வருவோர்;; போவோர்; வல்லோர்; பெரியோர்;

அனைவரையும் அரவணைக்கும்

தாயிழந்த நூற்குழந்தை- பாவம்.

வாசி வாசி என வரலாறு கொடுக்கும்

தலைப்பிழந்த நூல்கள்.

 

நாமோ இன்னமும்

பருவஇதழ்ப் பக்கங்களில்

‘காப்பெற்’ நடுச்சந்திகளில்

உயர் அடுக்கு விடுதிகளில்

க(கி)ழிந்து போன காலங்களைப் பேசியபடி

எஞ்சியிருக்கும் வெம்மையையும்

‘தண்ணி’ ஊற்றி அணைத்தபடி

வெற்றுடலாய் அலைவோம்.

 

அயலவர்கள் வெறுந்தலையர் என விரட்ட

மருந்திழந்த (தீக்) குச்சியென

விழுந்திடவா நாம் பிறந்தோம்- இல்லை

இனியாவது நாம் எழுவோம்

வாசிப்பின் மேன்மை போற்றுவோம்

அறிவுத் தீ மூட்டும் தீக்குச்சிகள் சேர்ப்போம்

அவை தரும் மருந்தின் வெம்மைகளை

சிரசில் சேர்ப்போம்

நூலகச் சிறையின் கைதிகள் ஆவோம்

நூலகத் தீ முதல் ‘உதயன்’ தீ வரை

எண்ணிறந்த தீக்குச்சிகள் வீணாய்ப் போனபின்

எழுத்துக்களா இனிச் சூடேற்றப் போகிறது.

 

என் எழுத்துக்களைக்கூட சாய்த்தே எழுதுகின்றேன்

நிமிர்த்தி எழுதினால் அவற்றைச் சில பேனாக்கள் வெட்டும் எரிக்கும்.

ஏனிப்படி நாம்

எரிந்த தீக்குச்சி ஆனோம்.

 

இனி

பிறக்கும் பிஞ்சுகளுக்கும்

நூலகத்தின் வெம்மை தெரிய வேண்டும்

வாசிப்பின் வலி புரிய வேண்டும்

 

சுற்றுலாவிகளாய் அன்றி

மனிதம் மிக்க வாசகராய்

இந்நூலாலயத்திற்கு

நித்தம் வருதலின் அர்த்தம் தெரியவேண்டும்.

 

அவர்களைக் கொஞ்சம்

சந்திக்க விடுங்கள் – நூலகத்தைச்

சற்று சிந்திக்க விடுங்கள்

 

அவர்களையாவது

வாசிக்கப்பழக்குவோம்

வரலாற்றைப் பேணுவோம்

 

 

சுடரேற்றவாவது இருக்கட்டும்

சில எரியாத தீக்குச்சிகள்

 

எல்லோரும் உரசிப் போகின்றார்கள்

நாங்கள் பற்றுவதே இல்லை

நூலகம் முதல் உதயன் வரை

எம்முள் வெம்மை விதைக்கப் போராடும்

தீந்தழல் வாழ்க!

வெந்தழல் வெல்க!

 

‘ரிதம்’

Leave a Reply

Your email address will not be published.